User Info
38.107.191.103
Who's Online
We have 3 guests online




| Impressions total: | 61113 |
| 3. எங்கும் தலைமை! எதிலும் தலைமை! |
|
|
|
| Wednesday, 04 March 2009 21:10 | |
|
"லா இஸ்லாம இல்லா பி ஜமாஅதின் லா ஜமாஅத இல்லா பி இமாரதின் லா இமாரத இல்லா பி இதாஅதின்" கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை தலைமை இல்லாமல் கூட்டமைப்பு இல்லை கீழ்ப்படிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை!" "முஸ்லிம்கள் எங்கிருந்த போதிலும் சரி, எப்படிப்பட்ட சூழலில் இருப்பினும் சரி, சுதந்திரமாக வாழ்ந்தாலும் சரி, அடிமைப் படுத்தப் பட்டிருப்பினும் சரி, ஒரு சிறிய பணியைச் செய்து முடிப்பதாயினும் சரி, மிகப் பெரும் போர் ஒன்றை வழி நடத்துவதாயினும் சரி - அவர்களுக்குத் தலைமை அவசியம். சுருங்கச் சொன்னால் தலைமை என்று ஒன்று இல்லாத நேரம், இல்லாத சூழல், இல்லாத நிலைமை - முஸ்லிம் சமுகத்திற்கு இருக்கவே முடியாது. இதனை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை மூலமாக நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 13 ஆண்டுகள் மக்காவில் தங்கி இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு சில நூறுகள் தான். முஸ்லிம்கள் அங்கே கொடுமைப் படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கென எந்த ஒரு உரிமையும் அங்கே இல்லாதிருந்தது. அந்தச் சூழலிலும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்கள்.முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் எல்லை மீறிச் சென்று விட்ட போது அபிஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்திடுமாறு நபிகளார் ஆலோசனை வழங்கினார்கள். பத்து பேர்கள் கொண்ட முதல் குழு மக்காவை விட்டுப் புறப்பட்டது. உத்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். ஹிஜ்ரத்தின் போதும் தலைமை! பின்னர் அல்லாஹ்வின் கட்டளைப் படி அனைத்து முஸ்லிம்களும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசினை நிறுவுகிறார்கள். அந்த பத்து ஆண்டு கால மதீனத்து வாழ்விலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தலைவர்! அதாவது ஆட்சித் தலைவரும் கூட.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்கொண்ட போர்கள் பற்றி நாமனைவரும் அறிவோம். முதலில் பத்ருப் போரை எடுத்துக் கொள்வோம். 313 நபித்தோழர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் போருக்குப் புறப்பட்டனர். அப்படியானால் அவர்கள் போர் முடித்து மதீனா திரும்பும் வரை மதீனாவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? முதலில் அந்தப் பொறுப்பு அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடமும் பின்பு அபூலுபாபா பின் அப்துல் முன்திர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் தான் ஒப்படைக்கப் பட்டது. சரி, பத்ருப் படைக்கு இப்போது வருவோம். அந்தச் சிறிய படையும் இரண்டு அணிகளாகப் பிரிக்கப் பட்டன. வலது புற அணிக்குத் தலைவர் - அல் ஜுபைர் பின் அல் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு - இடது புற அணிக்குத் தலைவர் - அல் மிக்தாத் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு. இந்த இரண்டும் தவிர்த்து பின் புறத்தில் இருந்த அணிக்குத் தலைவர் - கைஸ் பின் அபீ ஸஃஸஆ ரளியல்லாஹு அன்ஹு- இவை எல்லாவற்றிற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் தலைமைத் தளபதி (Commander-in-Chief)! எப்படிப் பட்ட ஒரு கட்டுக் கோப்புடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் நடத்தியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? இனி உஹதுக் களத்துக்குள் புகுவோம். ஆயிரம் நபித்தோழர்கள் முதலில் புறப்பட்டாலும் போரில் உண்மையில் கலந்து கொண்டவர்கள் 700 பேர்களே. போருக்குப் புறப்படும் முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் படையினரை மூன்று அணியினராகப் பிரித்தார்கள். அவைகளாவன:1. அல்-முஹாஜிரீன் அணி - இதற்குத் தலைவர் - முஸ் அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு 2. அல்- அன்ஸாரி 'அவ்ஸ்' அணி - இதற்குத் தலைவர் - உஸைத் பின் ஹுளைர் ரளியல்லாஹு அன்ஹு 3. அல்- அன்ஸாரி 'ஃகஸ்ரஜ்' அணி - இதற்குத் தலைவர் - அல் ஹுபாப் அல் பின் அல் முன்திர் ரளியல்லாஹு அன்ஹு வழக்கம் போல மதீனாவின் நிர்வாகத்தைக் கவனிக்கவும், தொழுகை நடத்தவும் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நியமித்தார்கள் நபியவர்கள்.போர்க் களத்திற்கு எதிரிகளை விட சற்று தாமதமாகவே வந்து சேர்ந்தது முஸ்லிம் படை. கிடைத்த குறுகிய நேரத்திற்குள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 50 பேர் கொண்ட ஒரு குழுவைத் தேர்வு செய்து, அதற்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு என்ற அன்ஸாரித் தோழரைத் தலைவராக நியமித்து ஒரு மலைக்கு அருகில் அவர்களை நிறுத்தி, எதிரிகள் பின்புறமாக வந்து தாக்கி விடாமல் இருக்க ஏற்பாடு செய்தார்கள். மற்ற நபித்தோழர்கள் இரு அணிகளாகப் பிரிந்து வலது புற அணிக்குத் அல் முன்திர் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தலைவராக்கினார்கள். இடது புற அணிக்கு அல் ஜுபைர் பின் அல் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தலைவராக நியமித்தார்கள்.ஏன் இவ்வளவு ஏற்பாடுகள்? அப்போது தான் ஒரு கட்டுக் கோப்புடன் செயல் பட முடியும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர நிறைய பேர்களைத் தலைவர்களாக்கிப் பார்த்து விட வேண்டும் என்பதற்காக அல்ல. 'முஃத்தா' போரை எடுத்துக் கொள்வோம். அண்ணலார் இந்தப் போரில் கலந்து கொள்ளவில்லை. 3000 பேர் கொண்ட படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். ஸைத் பின் ஹாரிதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தலைவராக்கினார்கள். அவர்கள் கொல்லப் பட்டால் ஜஃபர் பின் அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும், அவர்களும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் தலைமைக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி அண்ணலார் உத்தரவிட்டார்கள். போரில் அம்மூன்று தலைவர்களும் ஷஹீதானதும், ஏனைய நபித்தோழர்கள் காலித் பின் வலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தலைவராகத் தேர்வு செய்து கொண்டார்கள். சரி, போர்கள் இருக்கட்டும் - மற்ற நேரங்களில்? ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஒரு கூட்டத்தாருக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பத்து நபித்தோழர்களை அனுப்பி வைக்கிறார்கள். இங்கேயும் தலைவரைத் தேர்ந்தெடுக்க மறக்கவில்லை. ஆஸிம் பின் தாபித் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களைத் தலைவர் ஆக்கி அனுப்பி வைத்தார்கள். அதே ஆண்டில் 'நஜ்து' பகுதியில் உள்ள் இன்னொரு கூட்டத்தார் அண்ணலாரிடம் வேண்ட எழுபது நபித்தோழர்களை அவர்களிடம் அனுப்பி வைக்கிறார்கள். மறவாமல் தலைவராக அல் முன்திர் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நியமிக்கிறார்கள். ஹிஜ்ரி 9 - ம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப் பட்டது. சுமார் 100 நபித்தோழர்கள் அந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்கு ஹள்ரத் அபூ பக்ர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தலைவராக நியமித்து அனுப்பி வைத்தார்கள்.தான் இவ்வுலகை விட்டுப் பிரிய சில நாட்களுக்கு முன்பு கூட கிழக்கு ரோமப் (பைஸாந்தியப்) பேரரசை நோக்கி ஒரு படையை அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்தார்கள் அண்ணலார் அவர்கள். அப்படைக்கும் உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தலைவராக நியமிக்கத் தவறி விடவில்லை அவர்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: "மூன்று பேர்கள் பயணம் மேற்கொள்வதாக இருந்தால், அவர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளட்டும்." அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு "ஒரு கூட்டில் வாழ்கின்ற மூன்று மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களும் தமக்குள் ஒருவரை அவசியம் தங்கள் தலைவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்." அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு ஆனால் நமது நிலை என்ன? தலை சிறந்த சிந்தனையாளர் சகோதரி மர்யம் ஜமீலா (Maryam Jameelah) அவர்கள் கூறுகிறார்கள்:"It is extremely difficult to get Muslims and most other oriental peoples to collaborate and cooperate with one another.... It is very rare that two or more scholars will agree to work together even on a single book...."" "முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த கிழக்குலக மக்களாக இருந்தாலும் சரியே - அவர்களில் - ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் ஒத்துழைத்துப் பணியாற்றக் கூடியவர்களைக் காண்பது - மிக மிகக் கடினம்.! ....அவ்வளவு ஏன், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு நூல் எழுதுவதற்காகக் கூட அவர்கள் ஒன்று பட்டு பணீயாற்றுவதற்கு சாத்தியம் மிக மிக குறைவே!" இப்போது ஒரு கேள்வி. தலைமை குறித்து அதிகமாக வலியுறுத்தப் பட்டிருந்தும், அதற்கான விரிவான வழி காட்டுதல்கள் நம்மிடம் இருந்தும், ஒரு தலைமைக்குக் கீழ் ஒருங்கிணைந்து பணியாற்றுவதின் சிறப்பை ஏன் நாம் இன்னும் உணர்ந்திடவில்லை? எந்த ஒரு துறையிலும் நம்மால் ஒருங்கிணைந்து செயல் பட முடியவில்லையே அது ஏன்? சிந்திப்போமா? www.counselormansoor.com
|



