User Info

IP Address
38.107.191.102
United States United States

Who's Online

We have 3 guests online

Impressions total:61112
26. இவன் தான் முஸ்லிம் - பாகம் - 2 PDF Print E-mail
Wednesday, 07 January 2009 17:41

வானமும் அழவில்லை! பூமியும் அழவில்லை!

திருகு மறைக் கதையை இப்போது எடுத்துக் கொள்வோம். தொழிற்சாலையின் ஏதோ ஒரு மூலையில் வேலை பார்த்து வந்த நமது கதாநாயகன் அந்தத் தொழிற்சாலையின் மிகச் சிறியதொரு இயக்கத்தில் தான் குறை வைக்கிறான். ஆனால் என்ன நிகழ்கிறது? அது ஒட்டு மொத்தத் தொழிற்சாலையின் செயல் பாட்டையும் பாதித்து விடுகின்றது.

இதே கதை தானைய்யா மனிதனின் விவகாரத்திலும்!

அதாவது மனிதன் தனக்கென ஒரு பாதையைத் தானே வகுத்துக் கொண்டு, இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் ஒட்டு மொத்தப் பேரண்டத்தின் சீரான இயக்கத்தோடு அவன் மோதிடத் தலைப் படுகின்றான் என்றே பொருள்.

அதாவது மனிதத் தவறுகளின் விளைவுகள் மனிதனை மட்டும் பாதிப்படையச் செய்வதில்லை. மாறாக அவை பேரண்டத்தின் ஏனைய படைப்புகளின் செயல்பாடுகளையும் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன. இதனை ஒத்துக் கொள்ள நமக்கு என்ன தயக்கம்?

 

நமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் குறை ஏற்பட்டால் அது நமது ஒட்டு மொத்த உடல் நலனை பாதிக்காதா?

ஒரு சிலர் தான் புகைக்கிறார்கள். ஆனால் சுற்றுப் புறச் சூழலை அது கெடுத்து விடுவதில்லையா?

ஒரு வீட்டில் தீப்பிடித்தால் அது அந்த வீட்டோடு நின்று விடுமா?

ஒரு யந்திரத்தில் இணைக்கப் பட்டுள்ள ஒரு பற்சக்கரத்தின் ஒரே ஒரு பல் உடைந்து விட்டால், யந்திரம் தொடர்ந்து இயங்குமா?

ஒரு கப்பலின் கீழ்த்தட்டு மக்கள் அந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ஒரே ஒரு ஓட்டை போட்டால், கப்பலின் மேல் தட்டு மக்கள் கவலையின்றிக் கரை போய் சேர்வார்களா?

இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா - மனிதனின் தவறுகள் பேரண்டத்தின் ஏனைய பகுதிகளில் - குறிப்பாக மனிதனைச் சுற்றியுள்ள படைப்பினங்களின் இயக்கத்தைச் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன என்பதை?

மனிதன் - இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் அப்படி என்ன தான் நிகழ்ந்து விடும் என்பதை அறிந்திடு முன் ஒரு வேலை. இறைவன் வழி காட்டுகிறான், இறைவன் வழி காட்டுகிறான் - என்கிறீர்களே, எது ஐயா அந்த இறைவனின் வழி காட்டுதல் என்பதை முதலில் பார்ப்போமா?

திருக் குர் ஆனின் மூன்று வசனங்களை மட்டும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்:

 

நபியே! இவர்களிடம் கூறும்: 'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்.

எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்.

பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்.

வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்.

அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்.

அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள். நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை.

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.

அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:151 - 153)

இறை வழிகாட்டுதலின் மிக மிக அடிப்படையான அம்சங்களை இரத்தினச் சுருக்கமாக இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறான் இறைவன். இறை வழிகாட்டுதலின் இந்த அடிப்படைகளில் இருந்து இன்றைய உலகம் எவ்வளவு தூரம் விலகிப் போயிருக்கிறது என்பதைக் குறித்து விரிவாக அலசிட இது இடமல்ல. எனினும் சுருக்கமாக இது குறித்துப் பார்ப்போமா?

# இறை மறுப்பு, பல தெய்வக் கோட்பாடுகள் மற்றும் இறைவனைப் புறக்கணித்து விட்டு எழுதப் பட்ட நவீன விஞ்ஞானம், மற்றும் ஏராளமான நவீன இஸங்கள்....

# பெற்றோரை அவமதித்தல், அவர்களைக் கொடுமைப் படுத்துதல், அவர்களைக் கை விட்டு விடுதல்....

# கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை,மனிதனின் இயற்கையான இன விருத்தி அமைப்பில் இஷ்டத்துக்குக் கை வைத்தல்....

# மானக்கேடானவை எவை என்பதற்கு இலக்கணம் வகுத்துத் தருகின்ற - திரைப்பட உலகம், நிர்வாணப் படங்கள், விபச்சாரம், அழகிப் போட்டிகள், ஆபாச விளம்பரங்கள், ஓரினச் சேர்க்கை, மது, போதைப் பொருட்கள்....

# அன்றாட நிகழ்ச்சியாகிப் போய் விட்ட கொலை பாதகச் செயல்கள், இனப் படுகொலைகள், குழு பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம்....

# வெளியே தெரியாம்ல் சூரையாடப் படுகின்ற அனாதைகளின் சொத்துக்கள், சுரண்டப் படும் ஏழை நாடுகளின் வளங்கள்....

# சிறு வியாபாரிகள் முதல் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் வரை நடத்துகின்ற வியாபார மோசடிகள், தில்லுமுல்லுகள்....

# ஏழைக்கு ஒரு நீதி,பணக்காரனுக்கு ஒரு நீதி,வல்லரசுகளுக்கு ஒரு நீதி, ஏழை நாடுகளுக்கு ஒரு நீதி....

இவை தானே இன்றைய உலகம்!

விளைவு? இறைவனே என்ன சொல்கின்றான் என்று பார்ப்போமா?

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(30:41)

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்:

# எந்தச் சமூகத்தில் மோசடிகள் நடக்கின்றனவோ அந்தச் சமூக மக்களின் உள்ளங்களில் இறைவன் கலக்கத்தை உண்டாக்கி விடுகின்றான்.

# எந்தச் சமூகத்தில் விபச்சாரம் பரவுகிறதோ அந்தச் சமூகத்தில் மரணங்கள் அதிகரித்தே தீரும்.

# அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்யும் ஒரு சமூகத்தில் உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும்.

# எந்தச் சமூகத்தில் அநீதியான தீர்ப்புகள் வழங்கப் படுகின்றனவோ அந்தச் சமூகத்தில் - படுகொலைகள் அதிகரித்து விடும்.

# எந்தச் சமூகம் தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விடுகின்றனவோ அந்தச் சமூகம் எதிரிகளின் அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டு விடும். (ஆதாரம்: நபிமொழி நூல் - மாலிக்)

மேலும் அவர்கள் சொன்னார்கள்: நிலத்திலோ, நீரிலோ, கடலிலோ பொருளில் நஷ்டமேற்பட்டு அழிவு உண்டாவதெல்லாம் (ஏழைகளுக்குச் சேர வேண்டிய) ஜகாத்தினைத் தடுத்து வைப்பதின் காரணத்திலேயாகும். (ஆதாரம்: நபிமொழி நூல் - தபரானி)

இறை வழி காட்டுதலைப் புறக்கணித்தால் நீரிலும், நிலத்திலும் ஏற்படுகின்ற குழப்பங்களைக் கவனித்தீர்களா? ஆக - நாம் சொல்ல வருவது என்னவெனில் மனிதனின் செயல்கள் மற்ற மனிதர்களையும் பாதிக்கும், இறைவனின் ஏனைய படைப்புகளையும் பாதிப்படையச் செய்யும் என்பதைத் தான். எனவே தான் தரையிலும் குழப்பம். கடலிலும் குழப்பம்!

***

சரி! குழப்பம் நீங்கி அமைதி பெற என்ன வழி? சீர்திருத்தம். ஆம். மனிதன் ஏற்படுத்தி விட்ட குழப்பங்கள் அனைத்தையும் நீக்கிடும் சீர்திருத்தமே உடனடித் தேவை. சீர்திருத்தத்தின் முதல் படி என்ன?

 

மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதைப் பிரித்துக் காட்டுகின்ற அறிவை ஊட்டுவது தான். அதாவது கல்வி. அது மக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வி. இந்தக் கல்வியைப் பெற்றுக் கொள்பவன் சீர்திருந்துகிறான். பிறரை சீர்திருத்துகிறான்.

நீரில் வாழ்வனவும் நிலத்தில் வாழ்வனவும் அத்தகைய சீர்திருத்தம் ஒன்றுக்காக ஏங்கி நிற்கின்றன என்பதை அறிந்திட நீங்கள் வியந்து போவீர்கள்!

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்:

மக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வியைக் கற்றுத் தருகின்ற அறிஞனுக்காக - இறைவனும், அவனது வானவர்களும், புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகள் உட்பட எல்லா தரை வாழ் உயிரினங்களும், மீன்கள் உட்பட எல்லா நீர் வாழ் உயிரினங்களும் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். (நபிமொழி நூல்: திர்மிதி)

மக்கள் பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர் புறப்பட்டுச் செல்கிறார் மக்களை சீர்திருத்தம் செய்திட. மக்களுக்கு ந
Wபோதனை அளித்திட. அவருக்கும் - புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகளுக்கும், தண்ணீரில் வாழ்ந்திடும் மீன்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவை அவரை வாழ்த்திட வேண்டும்? மனிதக் கரங்கள் செய்திட்ட குளறுபடிகளினால் அவைகளும் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே மனிதன் சீர்திருந்தினால் தங்களுக்கும் விடிவு பிறந்திடும் என்று அவரை வாழ்த்திட முன் வந்தன போலும்!

இத்தகைய சீர்திருத்தத்தைத் தான் முஹம்மது நபி (ஸல்) உட்பட அனைத்து இறைத்தூதர்களும் செய்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களை "அகில உலகத்தாருக்கும் ஓர் அருட்கொடை" -யாக நாம் அனுப்பினோம் என்கிறான் இறைவன். அகில உலகத்தாருக்கும் என்று இறைவன் சொல்வது ஏன் என்பது புரிகின்றதா?

சரி, குழப்பங்கள் தோன்றிட மனிதன் ஏன் காரணமாகி விடுகின்றான்? மனிதனின் ஒரு குறிப்பிட்ட மன நிலையே எல்லாக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். அந்த மன நிலை எது தெரியுமா? கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூர்ந்து கவனியுங்கள்:

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: 'எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று. அதற்கவன், 'நானும் உயிர் கொடுக்கிறேன். மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்
¢ (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: 'திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2:258)

புரிகின்றதா?

***

சரி, மனிதன் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் சீர்திருத்தப் படாமலேயே விட்டு விடப் பட்டால் என்ன தான் ஆகும்?

மனிதனின் நன்மைக்காகவே படைக்கப் பட்ட ஏனைய படைப்புக்களைக் கொண்டே இறைவன் மனிதனைத் தண்டிக்கின்றான். கடும் புயலைக் கொண்டும், இடி முழக்கத்தைக் கொண்டும்,கடலைக் கொண்டும், நில நடுக்கத்தைக் கொண்டும், கல் மாறி பொழிந்தும் அந்த சமூகம் தண்டிக்கப் படுகின்றது. இத்தகைய தண்டனைக்காக அவர்கள் இறைவனைக் குறை சொல்லிட இயலாது. ஏனெனில்...

"உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்கு அணு அளவும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்". (10:44)

அக்கிரமக்காரர்கள் அழிந்து போனால் மக்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் வானத்துக்கும் பூமிக்கும் என்ன வந்தது? கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னும் அவனுடைய படையினரும் செங்கடலில் வைத்து மூழ்கடிக்கப் பட்டனர். இதனைக் குறித்து இறைவன் இப்படிச் சொல்கின்றான்:

"பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை! பூமியும் அழவில்லை!" (44:29)

ஏன் அழவில்லை? புரிகிறதா?

***

ஒரு மனிதன் சிந்திக்கின்றான். அவன் தன்னப் படைத்த இறைவனைப் புரிந்து கொள்கின்றான். இப்பேரண்டத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் தான் மனித சமூகம் என்பதை உணர்கின்றான். இப்பேரண்டத்தின் அனைத்துப் படைப்புகளும் இறை நியதிக்குக் கட்டுப்படுவதினால் தான் இப்பேரண்டமே நிலைத்து நிற்கிறது என்பதை ஒப்புக் கொள்கின்றான். தானும் இறைவனின் பாதைக்குத் திரும்பிட விழைகின்றான்.இதைப் பார்த்து இறைவன் மகிழ்ச்சியடைகின்றான். இவன் இறைவனுக்கு அடி பணிந்து அமைதி அடைகின்றான்.

இவன் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கிடுவான். இவன் பெற்றோரை அவர்கள் உயிருள்ளவரைக் கை விட்டு விட மாட்டான். இவன் வறுமைக்கு அஞ்சி தன் குழந்தைகளைக் கொன்று விட மாட்டான். மானக் கேடான எந்த ஒரு துறையிலும் இவன் ஈடுபட மாட்டான் - ஒட்டு மொத்த உலகமே அவைகளை நியாயப் படுத்தினாலும் சரியே. இவன் கொலை காரனும் அன்று. பிறர் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவனும் அன்று. இவனது வணிகத்தில் மோசடி இருப்பதில்லை. நீதி என்று வந்து விட்டால் - இவனுக்கு முன்னால் எல்லாரும் ஒன்று தான்.

இவன் தன்னளவில் மட்டும் அமைதி அடைந்தவன் அன்று. தன் குடும்பத்துக்கு அமைதி தருபவன் அவன். தனது சமூகத்துக்கு அமைதி தருபவன் அவன். உலக மக்கள் அனைவருக்கும் அமைதி தருபவன் அவன். ஏன், சீர் கெட்டுப் போயிருக்கும் உலகத்தைச் சீர்திருத்த இவன் புறப்பட்டு விட்டதால் எறும்பு, மீன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் அமைதி தருபவன் தான் அவன். இவன் தான் முஸ்லிம்!

நீங்கள்?

 
© 2008 - 2009 CounselorMansoor.com
Site Designed and Hosted by MohamedHusain.com